ராஜேஷ்தாஸ் வழக்கில் தீர்ப்பளிக்கத் தடை இல்லை! – உயர்நீதிமன்றம் அதிரடி

ராஜேஷ்தாஸ் வழக்கில் தீர்ப்பளிக்கத் தடை இல்லை! – உயர்நீதிமன்றம் அதிரடி

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ”விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க எந்த தடையும் இல்லை” எனக்கூறி, ராஜேஷ்தாஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பெண் எஸ்.பி. ஒருவரை தன் காரில் அழைத்துச்செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்தார் என அந்தப் பெண் அதிகாரி அப்போதைய தலைமைச்செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.

தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்தது. பின்னர், சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த ஜூனில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பில், ராஜேஷ்தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதுடன், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் முன்னர் விசாரணைக்கு வந்தபோது, ”விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. அதனால் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும் வரை விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்” என ராஜேஷ்தாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு நீதிபதி, “இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை விழுப்புரம் நீதிமன்றத்தில் எந்த முடிவு எடுக்கப்பட மாட்டாது” எனத் தெரிவித்து இந்த வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.

அதையடுத்து, இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கத் தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக்கோரிய ராஜேஸ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com