தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்

திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி - புதிய மாநகராட்சிகள் உருவாக்கம்!

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி ஆகியவை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, ​​மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அரசு, பெருநகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர்ப்புறத் தன்மை கொண்ட, விரைந்து நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை அவற்றின் அருகில் அமைந்துள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகளாக அமைத்துருவாக்கி வருகிறது.

இதன்படி, கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கைகள் பெறப்பட்டன.

உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், 4 புதிய மாநகராட்சிகளை அமைத்துருவாக்குதற்கான நடைமுறைகளை தொடங்கிட முதலமைச்சர் தற்போது ஆணையிட்டுள்ளார்.

இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி; திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி; நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி; காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி, என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து இன்று (15.3.2024) ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள உள்ளாட்சிப் பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாகவும் அமையும்.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com