மூன்று பேரை வெட்டிக் கொன்ற வழக்கில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் உடைப்பன்குளம் பகுதியில் கடந்த 2014இல் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒரு சமூகத்தினா் வசிக்கும் பகுதியில், மற்றொரு சமூக இளைஞா்கள் பட்டாசு வெடித்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் உருவானது.
இதைத் தொடர்ந்து உடைப்பன்குளம் கீழத்தெருவைச் சோ்ந்த காளிராஜ், கோவை மாவட்டம், துடியலூரைச் சோ்ந்த வேணுகோபால், முருகன் ஆகியோா் மோட்டாா் சைக்கிளில் திருவேங்கடம் சித்தமருத்துவமனை அருகே சென்றபோது மா்மநபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக திருவேங்கடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருவேங்கடத்தைச் சோ்ந்த பொன்னுமணி, பரமசிவன், குருசாமி, தங்கராஜ், முத்துக்கிருஷ்ணன், முத்துசாமி, கண்ணன், பாலமுருகன், கண்ணன், சுரேஷ், கண்ணன் உள்பட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை காலத்தில் ஜெயராம், பொன்ராஜ், சரவணன் ஆகியோா் உயிரிழந்தனா்.
இவ் வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, 11 போ் குற்றவாளிகள் எனவும், அவா்களுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்படும் என செப்டம்பர் 24 ஆம் தேதி அறிவித்தாா்.
அதன்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா்களை போலீஸாா் நீதிமன்றத்தில் நேற்று ஆஜா்படுத்தினா். அப்போது, பொன்னுமணி, குருசாமி, காளிராஜ் என்ற தங்கராஜ், முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும், உலக்கண், கண்ணன், கண்ணன், பாலமுருகன், குட்டிராஜ் என்ற பரமசிவன் ஆகியோருக்கு 5 ஆயுள்தண்டனையும், தலா ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதமும், கண்ணன், சுரேஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். 11 போ் விடுதலை செய்யப்பட்டனா்.