புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க இனி கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
இ – சேவை மையங்கள் மூலமாக புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான ரசீதைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் அலுவலர்கள் வற்புறுத்துவதாக புகார்கள் கூறப்படுகின்றன.
இதையடுத்து, உணவுப்பொருள் வழங்கல் துறை துணை ஆணையர் ராகினி ரவிச்சந்திரன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் :
”புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க, சமையல் கேஸ் ரசீதைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டை விவரங்களை கட்டாயம் பதிவேற்ற வேண்டும்.
முகவரிச் சான்றாக ஆதார் அட்டையுடன் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் இணைக்க வேண்டும்:
1) சொத்து வரி ரசீது
2) வாடகை ஒப்பந்தப் பத்திரம்
3) மின் கட்டண ரசீது
4) கேஸ் சிலிண்டர் ரசீது (இருந்தால் மட்டும் கொடுக்கலாம்)
விண்ணப்பங்கள் சமர்ப்பித்த பிறகு, உரியபடி பரிசீலிக்கப்பட்டு 60 நாள்களுக்குள் புதிய ரேசன் கார்டு வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.