திருமாவுடன் முரண்படும் ரவிக்குமார் எம்.பி.!

தொல். திருமாவளவன் - துரை. ரவிக்குமார்
தொல். திருமாவளவன் - துரை. ரவிக்குமார்
Published on

கோவை அவினாசி மேம்பாலத்துக்கு ‘ஜி.டி. நாயுடு’ பெயர் வைத்தது தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவனும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி.யும் முரண்பாடான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 8ஆம் தேதி ஊர், தெரு, சாலைகள், நீர்நிலைகள், பொதுக் கட்டமைப்புகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவதற்கான அரசாணையை வெளியிட்டது. இதற்கடுத்து கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்த புதிய பாலத்துக்கு ‘ஜி.டி.நாயுடு’ பெயர் சூட்டப்பட்டிருப்பது, சர்ச்சையானது.

ஜி.டி.நாயுடு பெயர் வைத்தது தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஒருபக்கம் விளக்கம் அளிக்க, தி.க. தலைவர் வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் போன்ற பெரியாரிய இயக்கத் தலைவர்களும் மறுபக்கம் சாதிப் பெயர் சூட்டலை வரவேற்று ஆதரிக்கவும் செய்தனர்.

இந்த நிலையில், நேற்று தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் "ஜி.டி. என்று மட்டுமே பெயர் வைத்து, அவரை இளம் தலைமுறையிடம் கொண்டு போய் சேர்த்தால் அது மகிழ்ச்சி. ஜி.டி. நாயுடு என்ற பெயரில் தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்ற ஒரு முடிவை அரசு எடுத்திருப்பதால், அது சாதியை வளர்க்காது என்று நம்புவோம்.” என்று கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், வாரஇதழ் ஒன்றுக்கு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி அளித்துள்ள பேட்டியில்,“சாதியப் பின்னொட்டுகளை நீக்கச் சொல்லி, 1978இல் அன்றைய தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. 2018இல் சென்னை உயர்நீதிமன்றமும் ‘சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. சமீபத்தில் முதலமைச்சரும் இதேபோல் ஓர் அரசாணையை வெளியிட்டிருக்கிறார்.

ஜிடி நாயுடு மேம்பாலம்
ஜிடி நாயுடு மேம்பாலம்

இந்த நிலையில், கோவை மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு எனப் பெயரிட்டிருப்பது, மேற்கண்ட உத்தரவுகள் அனைத்துக்கும் முரணானது. ஆகவே சாதிப் பின்னொட்டு இல்லாத வகையில் மேம்பாலத்தின் பெயர் மாற்றியமைக்கப்பட வேண்டும். இல்லையென்றால், ‘சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்’ என்ற அரசாணையை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, தமிழக அரசின் அறிவிப்பு நீர்த்துப் போகாமல் இருக்க, மேம்பாலத்துக்குப் பெயர் மாற்றம் செய்ய அரசு முன்வர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என்று கூறியிருக்கிறார்.

சாதிப் பெயர் தொடர்பாக தலைவருக்கும் பொதுச்செயலாளருக்கும் முரண்பட்ட கருத்து இருப்பது பொதுமக்களிடையே மட்டுமில்லாமல் கட்சியினரிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com