கும்பகோணம் தீயிலிருந்து தப்பிய அக்னிச் சிறகு: துணை ஆட்சியர் ஜெனிபர்!

Jenifer escaped from school fire accident and became as deputy collector
துணை ஆட்சியர் ஜெனிபர்
Published on

கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய பள்ளி மாணவி ஜெனிபர், இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் மாநிலத்தில் 15ஆவது இடம்பெற்று துணை ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ளார்.

கும்பகோணத்தில் இருந்த தனியார் பள்ளியில் 2004, ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், 7 முதல் 11 வயதிற்குட்பட்ட 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட பள்ளியில் ஜெனிபர் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் கீழ்த் தளத்தில் இருந்ததால், அவருடைய தம்பியுடன் தப்பித்து வெளியேறினார். முதல் தளத்தில் இருந்த மாணவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாமல் 94 மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

பின்னர் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் சென்னையில் கணிதத்தில் பட்டப்படிப்பு முடித்தார்.

அதன்பின், 2017ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்தார். குடும்பச் சூழல் காரணமாக டிஎன்பிஎஸ்சி பயிற்சி நிறுவனங்களில் சேராமல், டியூசன் நடத்தி அதில் வரும் வருமானத்தில் புத்தகங்கள் வாங்கிப் படித்துள்ளார்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் மாநிலத்தில் 15ஆவது இடம்பெற்று சாதனை புரிந்துள்ளார்.

தன்னுடைய கடின உழைப்பின் பலனாக இன்று துணை ஆட்சியராக ஜெனிபர் பொறுப்பேற்க உள்ளார்.

தன் பள்ளி தீ விபத்தின்போது தஞ்சாவூர் ஆட்சியராக இருந்த இராதாகிருஷ்ணன் ஆற்றிய களப்பணியையும், மக்களுக்கு அவர் புரிந்த உதவிகளுமே தன்னுடைய கனவுக்கு உந்துதலாக இருந்தது என்று ஜெனிபர் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com