செய்தியாளர் சந்திப்பில் எடப்படி பழனிசாமி
செய்தியாளர் சந்திப்பில் எடப்படி பழனிசாமி

“கோ பேக் மோடி… வெல்கம் மோடி” – தி.மு.க.வை வெளுத்து வாங்கிய இ.பி.எஸ்.!

“கூட்டணி குறித்த விஷம பிரச்சாரத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்” என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

"எங்கள் தேர்தல் முழுக்கம் தமிழர் உரிமை மீட்போம்; தமிழ்நாடு காப்போம். தமிழ்நாட்டிலிருந்து கழகத்தின் சார்பில் கூட்டணி சார்பிலும் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த கருத்தின் அடிப்பையில் செயல்படுவார்கள்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும். தேர்தல் அறிவிப்பு வந்ததும் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். கூட்டணி தொடர்பாக சிலர் வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று தமிழக மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வார்கள். காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தது அ.தி.மு.க. உறுப்பினர்கள் தான்.

அத்துடன் நீட் தேர்வு குறித்து பேசி நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவுக்கு இவர்கள் எதையும் செய்யவில்லை. அப்போது கோ பேக் மோடி என்றார்கள். இப்போது வெல்கம் மோடி என்கிறார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. நாங்கள் இப்போதே பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டோம். மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டார்கள். களத்தில் எதிரிகள் இல்லை என்பது தெளிவாகி விட்டது" என்று தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை எங்களுடை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேர், நாடாளுமன்றத்தில் 16 ஆயிரத்து 219 கேள்விகள் கேட்டுள்ளனர். அதேநேரத்தில் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியினரும் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை 9695 கேள்விகள் தான்.

தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். அப்படி என்றால் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள்” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, அ.திமு.க.வின் தேர்தல் பிரச்சாரம் இன்று முதல் தொடங்கிவிட்டதாக கூறினார்.

அத்துடன் அ.தி.மு.க.வின் பிரச்சார முன்னோட்டங்களை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி 'தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்' என்ற முழக்கம் கொண்ட இலட்சினை வெளியிடப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com