சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ராஜீவ் வழக்கு: முருகன் உட்பட 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை - மத்திய அரசு

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன் உட்பட 4 பேரும் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முருகனின் மனைவி நளினி, தன் கணவர் முருகனை விடுதலை செய்தபின்னரும் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் தங்கள் மகளுடன் லண்டனில் வசிக்க வசதியாக அவரை சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

அந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் இன்று ஆஜரான மத்திய அரசின் அதிகாரி, வெளிநாட்டவரான நான்கு பேரிடமும் முறையான பாஸ்போர்ட் உட்பட்ட ஆவணங்கள் இல்லாததால், அவர்கள் சிறப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களின் பயண ஆவணங்களைக் கேட்டு இலங்கைத் தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அந்த விவரங்கள் கிடைத்த பின்னர், நால்வரையும் அவர்களின் நாட்டுக்கே அனுப்பிவைப்பதா, முருகனை மட்டும் லண்டனுக்கு அனுப்பிவைப்பதா என்று முடிவுசெய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com