செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜி விலகல்- ஆளுநர் இரவி ஏற்பு!

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி விலக விரும்பிய நிலையில், ஆளுநர் ஆர்.என். இரவி இன்று அதை ஏற்றுக்கொண்டார்.  

அரசு வேலைக்காகப் பணம் வாங்கிக்கொண்ட குற்றச்சாட்டில் வழக்கை எதிர்கொண்ட செந்தில்பாலாஜி மீது, ஊழல் தடுப்புத் துறையின் சார்பில் வழக்கு பதியப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததை அடுத்து மைய அரசின் அமலாக்கத் துறையும் அவர் மீது இது தொடர்பாக வழக்கு பதிந்தது.

அதில் அவர் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு, சிறையில் இருந்துவருகிறார்.

இடையில் அவருக்கு இதய அறுவைச்சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்றம்வரை சென்றும் அவரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து துறையில்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்துவந்தார்.

கடந்த முறை அவரின் பிணை மனு மீதான விசாரணையில், நீதிமன்றம் அமைச்சர் பதவியில் பாலாஜி தொடர்வது குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.

புதனன்று அவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பாலாஜியை அமைச்சரவையிலிருந்து விடுவிக்குமாறு நேற்று முதலமைச்சர் ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பினார்.

அதை, ஆளுநர் இரவி ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகையின் தரப்பில் சற்றுமுன் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com