21 நாள்களில் தொழில் திட்ட அனுமதி- புதிய சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்!

Governor Arlekar
ஆளுநர் அர்லேகர்
Published on

தமிழகத்தில் தொடங்கப்படும் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான தமிழக அரசின் சட்டத்திற்கு ஆளுநர் அர்லேக்கர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு வணிக எளிதாக்கல் சட்டம், 2026-க்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாவது:

"தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பெருக்க தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக அரசின் தலைமைச் செயலாளர் இருப்பார். தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அரசு செயலாளர், உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளராக இருப்பார். மேலும், அரசு நிர்ணயிக்கும் முறையில் 20 பேருக்கு மிகாமல் உறுப்பினர்களை நியமிக்கலாம்.

இந்த ஆணையம் பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த முதலீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும். குறிப்பாக, ரூ.200 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மூலதன முதலீடு செய்யப்பட உள்ள திட்டங்கள், 5 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர் பார்க்கப்படும் திட்டங்கள், எப்.டி.ஏ. வர்த்தக ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய முதலீடுகள், இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் தமிழர் வம்சாவளியினரின் முதலீடுகள் ஆகியவை இதில் அடங்கும்.

இத்தகைய முதலீடுகள் திட்டம் தொடங்குவதற்கு முன் உள்ள நிலையில் இருந்து, திட்டம் நடைமுறைக்கு வந்து உற்பத்தி அல்லது செயல்பாடு தொடங்கும் நிலை வரையிலும் அவற்றின் முன்னேற்றத்தை ஆணையம் ஆய்வு செய்யும்.

தொழில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு, இன்னும் வணிக ரீதியிலான செயல்பாடுகள் தொடங்காத தொழில் நிலங்களின் ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டையும் ஆணையம் ஆய்வு செய்யும்.

இந்தச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் ஒற்றைச் சாளர முறையுடன் தொடர்புடைய இந்திய அரசின் நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும். ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

தொழில் திட்டங்களுக்கு வழங்கப்படும் அனுமதிகள் தொடர்பாகவும் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டம் அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளில் ஏதேனும் அனுமதிக்கு 21 நாள்களுக்கு மேல் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலோ அல்லது காலவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாமல் இருந்தாலோ, அந்தக் காலவரம்பு 21 நாள்களாகக் குறைக்கப்பட்டதாகக் கருதப்படும்.

அரசு அறிவிக்கும் பொது விடுமுறைகள், உள்ளூர் விடுமுறைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஏற்கனவே 21 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அந்தக் காலவரம்பே தொடர்ந்து அமலில் இருக்கும்." என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com