முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

“ஆளுநர் என்றாலே பிரச்சனைதான்…மாட்டிக் கொண்டு முழிக்கிறோம்!” -முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ”ஆளுநர் என்றாலே பிரச்சனைதான் என்றும் தமிழ்நாட்டு ஆளுநரிடம் நாங்கள் மாட்டி முழித்துக் கொண்டிப்பதாகவும்” அவர் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சூராவளி பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

புதுச்சேரியின் வளர்ச்சிக்குத் தி.மு.க.வும் – காங்கிரசும் பாடுபட்டால், புதுச்சேரியை எப்படியெல்லாம் பின்னோக்கிக் கொண்டு செல்லலாம் என்று பா.ஜ.க. செயல்படுகிறது. இதைப் புதுச்சேரி மக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறீர்கள். இங்கு நம்முடைய வேட்பாளராக இருக்கும் வைத்திலிங்கம் அவர்கள் சட்டப்பேரவைத் தலைவராக இருந்தபோது, அவருடன் மோதினார் ஒரு துணைநிலை ஆளுநர். பா.ஜ.க.வின் கட்சிப் பொறுப்பில் இருக்கிறவர்களைப் புதுச்சேரி சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக போட்டு, சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கினார், ஒரு துணைநிலை ஆளுநர். அதுமட்டுமல்ல, ஆட்சியில் இருந்த அரசையே புறக்கணித்துவிட்டு, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள். மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தராமல், அந்த வசதிகள் இல்லை என்று காரணம் காட்டி ரேஷன் அரிசியைத் தடை செய்தார்கள். புதுச்சேரியில் பொங்கலுக்கு தரும், வேட்டி-சேலை, இலவச அரிசி எல்லாம் எதற்கு என்று கேள்வி கேட்டார்கள். இப்படி செய்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக இருந்த நம்முடைய நாராயணசாமி அவர்களுக்கு ஒத்துழைக்காமல் அரசியல்சட்டக் கடமையைக் காற்றில் பறக்கவிட்டு, புதுச்சேரி நிர்வாகத்தைச் சீர்குலைத்தது பா.ஜ.க. இப்படி செயல்பட்டது யார் என்றால், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி அவர்கள். ஐ.பி.எஸ்.ஆக இருந்தவர் அவர். சட்டத்தை நிலைநாட்ட போலீசாக வேலை பார்த்த அவரே, துணைநிலை ஆளுநராக அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டார்.

இப்படி, தமிழ்நாட்டிலும் ஒரு ஆளுநர் இருக்கிறார். அவரும் ஐ.பி.எஸ்.ஆக இருந்தவர்தான். நான் பல நேரங்களில் சொல்வதுண்டு, அவர் தொடர்ந்து இருக்கட்டும். அவர் இருந்தால், தி.மு.க.விற்கு அங்கு பெரிய பிரச்சாரமே நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையில் பதவிக்காலம் முடிந்ததும் இவர்களை எல்லாம் ஆளுநர்களாக்கி, அரசியல்சட்டத்தை மீறி பா.ஜ.க.வின் ஏஜெண்டுகள் போன்று விளம்பரத்திற்காகவே செயல்படுகிறார்கள். இப்படி ஆளுநர்கள் தொல்லை கொடுப்பது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும்தான் என்று நினைக்காதீர்கள். அதிலும் புதுச்சேரி விதிவிலக்கு. இங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரைக்கும், புதுச்சேரியின் முன்னேற்றம் - மக்களின் வளர்ச்சி இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்; அதற்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இதுதான் பா.ஜ.க.வின் கொள்கை.

தமிழ்நாடு போன்று மாநிலமாக இருந்தால் அதை முனிசிபாலிட்டியாக மாற்ற வேண்டும். புதுச்சேரி போன்று யூனியன் பிரதேசமாக இருந்தால் கிராமப் பஞ்சாயத்து போன்று ஆக்கிட வேண்டும். ஒட்டுமொத்தமாக எல்லோரும் டெல்லிக்குக் கீழ் இருக்க வேண்டும். இதுதான் பா.ஜ.க.வின் அஜெண்டா. அதனால்தான், கூட்டணி அரசு இருந்தாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல் தன்னுடைய கைப்பிடியிலேயே வைத்திருக்கிறது பா.ஜ.க. அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கிறார் புதுச்சேரி முதலமைச்சர். இந்த அவலங்கள் எல்லாம் தீர, இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். நாடு மீண்டும் ஜனநாயகப் பாதையில் கம்பீரமாக நடைபோட வேண்டும். மாநில உரிமைகள் மட்டுமல்ல, யூனியன் பிரதேசங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் இந்தியா கூட்டணியை நாடு தழுவிய அளவில் அமைத்திருக்கிறோம்.

புதுச்சேரி முன்னேற வேண்டும் – புதுச்சேரி மக்களின் வாழ்க்கையில் புதிய மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், பா.ஜ.க. ஆட்சி வீட்டுக்குப் போக வேண்டும். இந்தியா கூட்டணி டெல்லியில் ஆட்சியில் அமர வேண்டும். ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்போது, சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளைச் சொல்லியிருக்கிறோம். அதில் முக்கியமான வாக்குறுதியான, புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம். அது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்திருக்கிறது. புதுச்சேரி மக்களின் பலநாள் கனவான, மாநில அந்தஸ்து ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும், நிறைவேறப் போகிறது!” என்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பட்டியலிட்டுப் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com