“ஆளுநர் ஆர்.என். ரவியின் திமிரை அடக்கவேண்டும்....!”

ஆளுநர் ஆர்.என். ரவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என். ரவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

திமிரெடுத்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவியின் திமிரை அடக்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பாஜகவுக்கு வாக்களிக்காத தமிழ்நாடு எதைக் கேட்டாலும் தரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறது பா.ஜ.க.

‘அதிமுக ஆட்சிக்கு வந்தால், கோவைக்கு மெட்ரோ கொண்டு வருவோம்’ என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதேபோல, பாஜகவைச் சேர்ந்த கோவை சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் இதே கருத்தைச் சொல்லி இருக்கிறார். அப்படியென்றால், திமுக ஆட்சியில் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால்தான் கோவை, மதுரை மக்களை பாஜக பழிவாங்குகின்றது என்று ஒப்புதல் வாக்குமூலமே வழங்கியிருக்கிறார்கள். இப்படியெல்லாம் தமிழ்நாட்டிற்கு கொடுக்கின்ற குடைச்சல் போதாது என்று தமிழ்நாட்டின் வளர்ச்சியை நிரந்தரமாக கெடுக்க வேண்டும் என்றே ஒருவரை பாஜக ஆளுநரை நியமித்திருக்கிறார்கள்.

அவர் சமீபத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சேவையாற்ற அவர் வந்திருப்பதாக சொன்னதை கேட்டதுமே, சிரிப்புதான் வந்தது. தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கிறதாம். தீவிரவாதப் போக்கு நிலவும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதாம். தமிழ்மொழி வளர்ச்சிக்காக இங்கே எதுவும் நடக்கவில்லையாம். எல்லோரும் ஆங்கிலம் படிக்கிறார்களாம். இப்படியெல்லாம் அவதூறு, ஆற்றாமை கலந்து புலம்பியிருக்கிறார் ஆளுநர்.

ஒன்றிய பாஜக ஆட்சியில்தான் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்து, சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் பலியானார்கள்?

ஒன்றிய பாஜக ஆட்சியில் தான் டெல்லி செங்கோட்டை அருகில் குண்டுவெடிப்பு நடந்து அங்கே மக்கள் பல பேர் பலியானார்கள்?

பாஜக ஆட்சியில்தான் மணிப்பூர் பற்றி இன்றைக்கு எரிந்து கொண்டிருக்கிறது?

தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பாஜக ஆட்சியை புகழ்ந்து பேசியிருக்கின்ற ஆளுநர் , அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவருடைய திமிரை அடக்கவேண்டும்.

இக்கட்டான சூழல்களில் எல்லாம், தன்னுடைய தேசப்பற்றைக் காட்டி, நம்முடைய படை வீரர்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்குவது நம்முடைய தமிழ்நாடுதான்! அப்படிப்பட்ட தமிழர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கின்ற ஆளுநரின் பேச்சு என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பதுபோல பேசுகிறார். அவர் வகிக்கின்ற அரசியல் சாசனப் பொறுப்புக்குத் துளியும் பொருத்தமற்ற, தகுதியற்ற தரக்குறைவான பேச்சு இது!

எங்கள் பிள்ளைகள் உலக வாய்ப்புகளுக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். அதில், உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு எங்கே எரிகிறது? இன்னும் டபுள் மடங்கு ஆர்வமாக நாங்கள் ஆங்கிலம் படிக்க தயாராக இருக்கிறோம்!

இந்தியா முழுவதும் இந்தி பேசாத மாநில மொழிகள் இன்றைக்கு உயிர்ப்புடன் இருக்கும் என்றால், அதற்கு காரணமே தமிழ்நாடு உயிரைக் கொடுத்து மொழிப்போரில் ஈடுபட்டதுதான்! தாய்மொழிப் பற்று பற்றி தமிழ்நாட்டிற்கு நீங்கள் வகுப்பெடுக்க வேண்டாம்! அந்த பாடத்தில் பி.எச்.டி. வாங்கியவர்கள் நாங்கள்!

சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கலைஞர் பேரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காக மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்தால், அனுமதி கொடுக்காமல், மூன்று மாதம் கிடப்பில் வைத்து விட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். நான் கேட்கிறேன்… குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கின்ற அளவுக்கு, அதில் என்ன அரசியலமைப்புச் சட்ட பிரச்சினை இருக்கிறது? அவர் கிடப்பில் போட்டதை மறைக்க, குடியரசுத் தலைவர் மேல் பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார்.

“கலைஞர்” பேர் வைக்கக் கூடாது என்று மாணவர்களின் நலனில் விளையாடுவது என்ன நியாயம்? மக்களாட்சியை மதித்து, இதற்கான உரிய அனுமதியை விரைவில் கொடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறேன். இல்லையென்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரையே நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பார்கள். விரைவில் நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அந்த நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்! ஆனால், ஒன்று, ஆளுநர் ரவி அவர்களே, நீங்கள் இப்படிதான் தொடர்ந்து பேசவேண்டும். உங்களுடைய தமிழ் வெறுப்பை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்! நீங்கள் பேச பேசத்தான் எங்களுடைய வேலையும் ஈசியாகும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com