நேற்று காலை முதலே அண்ணா அறிவாலயம், கலைஞர் நினைவகம் என தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இரவில் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட தொடா் போராட்டங்களில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பகலில் 3 இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் எதிரில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற அவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்றனர்.
பிற்பகலில் சென்னை, மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திலும், சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை அருகே உள்ள கருணாநிதி சிலை எதிரிலும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண் தூய்மைப் பணியாளா்கள் நேற்று இரவு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர்கள், ”ஜனவரி 1ஆம் தேதி எங்களின் இறுதிச்சடங்குக்கு வாங்கள் ஐயா” என அவர்கள் முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.