ஜி.கே. மணி
ஜி.கே. மணி

‘மாம்பழம்’ சுவைக்க அறுவடைக் காலம் மிக விரைவில்! - ஜி.கே. மணி ட்வீட்!

பா.ம.க. எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே. மணி தனது எக்ஸ் தளத்தில் ”மாம்பழம் சுவைக்க அறுவடைக் காலம் மிக விரைவில்” என பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை அறிவித்து, தொகுதிப் பங்கீட்டையும் நிறைவு செய்துள்ளது. அ.தி.மு.க. பொறுத்தவரை இன்னும் கூட்டணிப் பேச்சுவார்த்தையே முடியவில்லை.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. இணையும் என்று கூறப்படுகிறது. ஆனால், தொகுதிப் பங்கீடு குறித்த விவகாரத்தில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. உயர்மட்ட தலைமை நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, பிற முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

தைலாபுரம் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் மாமரத்தின் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜி.கே. மணி, “பருவ காலத்தில் பூ பூத்துக் குலுங்கும் மகிழ்ச்சியான அற்புதக் காட்சி. மாங்காய் காய்த்து “மாம்பழம்” சுவைக்க அறுவடைக் காலம் மிக விரைவில்.” எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com