நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம்- பிரேமலதா காரசாரம்!

நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம்- பிரேமலதா காரசாரம்!
Published on

சட்டப்பேரவை இன்று கூடியதும் முதலமைச்சர் விஜய் தன்னுடைய அரசுக்கான வாக்கெடுப்புக்கு ஆதரவு தரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து சட்டமன்றக் கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.

காங்கிரஸ் கட்சியின் இராஜேஸ்குமார் பேசுகையில், மதச்சார்பற்ற ஆதரவு என்பதை மையமாக வைத்து பேசினார்.

வி.சி.க. வன்னி அரசு பேசுகையில், மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரவும் தனித்தமிழீழம் கொண்டுவரவும் வலியுறுத்தினார். கடந்த தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டங்களைத் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பேசிய செல்லசுவாமி, ஆளுநர் ஆட்சி வரவிடாமல் தடுக்க தங்கள் கட்சி விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி இராமச்சந்திரன் தங்கள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்துக்கொண்டார்.

அ.ம.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட காமராஜ், முதலமைச்சருக்கு ஆகா ஓகோவெனப் புகழ்பாடினார். அவருடைய மன்னார்குடி தொகுதியில் பெரும் கோடீசுவரர்கள் வென்ற இடம் எனக் கூறவும், தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவைத்தலைவர் பிரபாகர் தலையிட்டு அவரை விரைவாகப் பேசிமுடிக்கச் செய்தார்.

தே.மு.தி.க.வின் பிரேமலதா பேசுகையில், குதிரை பேரம் நடப்பதாகத் தகவல் வந்திருப்பது தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் வேதனையானது; சோதிடரை அரசு அதிகாரியாக நியமித்தது பற்றியும் முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

ம.ஜ.க.வின் தமிமுன் அன்சாரி, சோதிடம் குறித்த சேரன் செங்குட்டுவன் கதையைக் கூறி, முதலமைச்சர் தனிப்பட்ட நம்பிக்கைகளைக் கொண்டிருக்கலாம்; அதை அரசுமயமாக ஆக்கக்கூடாது என்று குறிப்பிட்டார்.

கொ.ம.தே.க. உறுப்பினர் நித்யானந்தம் பேசுகையில், தீய சக்தி எனப் பிரச்சாரம் செய்துவிட்டு அதே அணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் இந்த அரசாங்கம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.

ம.ம.க. ஜவாஹிருல்லா பேசியபோது, மற்றவர்கள் பேசியதை வழிமொழிந்ததுடன், அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடம் தர வலியுறுத்தினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com