தமிழகத்தில் 30 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 137 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில், 21ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி, கோவை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.