சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு நள்ளிரவு 11 மணிமுதல் பலத்த மழை பெய்ததால், விமான சேவை பாதிக்கப்பட்டது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ, விம்கோநகரில் 23 செ.மீ, கொரட்டூரில் 18 செ.மீ, கத்திவாக்கத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோலாம்பூர், மஸ்கட், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல இருந்த 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அதைபோல வெளிநாடு மற்றும் வெளியூரிகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 12 விமானங்கள் தாமதமாக வந்தடைந்தன.
ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், ஹைதராபாத், மங்களூர், டெல்லியில் இருந்து சென்னை வந்த 4 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த நிலையில், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன. 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தாமதமாக தரையிறங்கின. விமான சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.