இலவச மிதிவண்டிகளின் விலையைக் குறைத்த ஹீரோ நிறுவனம்!

Free bicycle scheme
இலவச மிதிவண்டித் திட்டம்
Published on: 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளுக்கான விலையை ஒன்பது கட்டப் பேச்சு வார்த்தைக்கு பிறகு ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் ஐந்து லட்சம் மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், புத்தகங்கள் வைக்க இடம், ஹெல்மட் ஆகியவற்றுடன் நவீன வடிவமைப்பில் மிதிவண்டிகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது.

இதற்கான டெண்டரில் குறைந்த விலையைக் குறிப்பிட்டு இருந்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தை தமிழக அரசு தேர்ந்தெடுத்தது.

முன்னதாக, மாணவருக்கான மிதிவண்டியின் ஆரம்ப விலை ரூ.7,119.60ஆகவும், மாணவியருக்கான மிதிவண்டியின் ஆரம்ப விலை ரூ.7,361.10ஆகவும் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், புதுச்சேரியிலும் இதேபோல அரசு வழங்கும் இலவச மிதிவண்டியின் கொள்முதல் விலை குறைவு எனத் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் கொள்முதல் விலை குறைக்கப்படுமா எனக் கேள்வி எழுந்தது.

இந்த விலைக்குறைப்புக்கு பிறகு மாணவருக்கான மிதிவண்டியின் விலை ரூ. 5,260ஆகவும், மாணவியருக்கான மிதிவண்டியின் விலை ரூ. 5,130ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஹீரோ நிறுவனம் குறிப்பிட்ட விலைப்படி, தமிழக அரசின் கொள்முதல் விலை ரூ. 392.32 கோடியாக இருந்தது. இதைதொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் தலைமையிலான கொள்முதல் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட ஒன்பது சுற்றுகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஹீரோ நிறுவனம், 29.60% விலையைக் குறைத்து ரூ. 276.20 கோடியாக நிர்ணயித்துள்ளது.

இதன் மூலமாக தமிழக அரசுக்கு ரூ. 116.12 கோடி மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram