கட்சிதாவிய எம்.எல்.ஏ.க்கள்... சபாநாயகரின் உத்தரவு செல்லும் - உயர்நீதிமன்றம்

High court order
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Published on: 

அ.தி.மு.க.வில் இருந்த 6 எம்.எல்.ஏ.க்களின் பதவி விலகலை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டு, பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சத்யபாமா (தாராபுரம் தொகுதி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம் தொகுதி), ஜெயக்குமார் (பெருந்துறை தொகுதி), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர் தொகுதி), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை தொகுதி) ஆகிய 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதாக சட்டப்பேரவைத் தலைவரிடம் எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, அவர்களின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இன்று அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், ”எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் பதவி விலகலாம். என்வே, இந்த விஷயத்தில் சட்டப்பேரவைத் தலைவரின் முடிவை அரசியல் சாசன விதிமீறலாகவோ, மோசடியாகவோ கருத முடியாது. பதவிவிலகியதன் பின்னணியில், குதிரை பேரம் இருப்பதாக மனுதாரர் கூறிய குற்றச்சாட்டை ஏற்றாலும், தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருப்பதால் பதவி விலகலை ஏற்கக் கூடாது என்று கூறமுடியாது. அதேபோல, பதவி விலகல் ஏற்கப்பட்டதால் தகுதி நீக்க நடவடிக்கை செல்லாததாகிவிடும் என்றும் கூற முடியாது.” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com