சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தைக் கண்காணிக்க நீதிபதிகள் குழு!

Chidambaram Natarajar Temple
சிதம்பரம் நடராஜர் கோவில்
Published on: 

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பது தொடர்பான வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் ஆகியோர் கூறியதாவது:

"கடந்த 2014ஆம் ஆண்டு, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகம் பொதுதீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் கோவிலை முறையாக நிர்வகிக்கவில்லை. எனவே, கோவில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு ஒன்றை நியமிக்கிறோம்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி. பாரதிதாசன், இந்த நிர்வாகக் குழுவின் தலைவராகவும், ஆர். சுரேஷ்குமார் துணைத்தலைவராகவும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராகவும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர், இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர் ஆகியோர் அலுவல்சாரா உறுப்பினர்களாகவும் நியமித்து உத்தரவிடுகிறோம்.

புதிய நிர்வாகக் குழு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:

1) கோவிலின் புராதான கட்டடங்களுக்கு இடையூறாகவும், அவற்றைச் சேதப்படுத்தியும் பொதுதீட்சிதர்களால் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை புராதனச் சின்ன ஆணையத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2) ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மீட்க வேண்டும்.

3) கோவிலின் வருமானத்தைப் பெருக்க நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) கோவிலின் புராதான கட்டடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல், கோவில் திருப்பணிகளை மேற்கொண்டு மதச் சடங்குகள், மரபுகளின்படி குடமுழுக்கு நடத்த வேண்டும்.

5) கோவிலின் கனகசபையில் நின்று அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சமவாய்ப்பு வழங்குவதை நிர்வாகக்குழு உறுதி செய்ய வேண்டும்." என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram