உடலை அடக்கம் செய்ய ஒரு லட்சமா? கடுப்பான நீதிமன்றம்

High court
சென்னை உயர்நீதிமன்றம்
Published on: 

மயானத்தில் உடலை அடக்கம் செய்ய கட்டணம் வசூலிப்பதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து சென்னை மாநகராட்சி அந்த நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை முகப்பேரில் உள்ள 66 ஏக்கர் மயான நிலத்தை, கடந்த 40 ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கிறிஸ்துவர்கள் பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலத்தைப் பராமரிக்கும் பொறுப்பை தேவநீதி என்பவர் கவனித்து வந்தார்.

முதலில், உடலை அடக்கம் செய்ய இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் ரூ. 40,000 வரை வசூலித்த தேவநீதி, தற்போது ரூ. 1,00,000 வரை வசூல் செய்வதாக மைக்கேல் பாண்டியன் என்பவர் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

மயானத்தில் உடலை அடக்கம் செய்ய பணம் வசூல் செய்யக்கூடாது என்று தேவநீதியை எச்சரித்தும், அவர் தொடர்ந்து பணம் வசூலித்து வருவதாக மனுதாரர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மனுதாரர் குறிப்பிட்ட அந்த மயான நிலத்தைப் பெருநகர சென்னை மாநகராட்சி கையகப்படுத்தத் தேவையான திருத்தங்களையும், பெயர் மாற்றங்களையும் மேற்கொள்ளுமாறும், அந்த நிலத்தைப் பராமரிக்கும் பொறுப்பை சென்னை மாநகராட்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்குக் கட்டணம் வசூலிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், இதைமீறி கட்டணம் வசூலித்தால் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram