அ.தி.மு.க.வின் முந்தைய ஆட்சிக் காலத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப்பொருட்கள் கொள்முதல் செய்ததில் 380 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக துறையின் அமைச்சராக இருந்த காமராஜ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுகுறித்து ஊழல் தடுப்புத் துறையிடம் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி புகார் அளித்தார். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திராவிடம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த முறைகேடு குறித்து 2018 ஆம் ஆண்டு புகார் அளித்ததாகவும் அதற்கு 2022ஆம் ஆண்டு விரிவான விசாரணை நடப்பதாக ஊழல் தடுப்புத் துறை பதில் அளித்ததாகவும், ஆனால் விதிகளின்படி ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்கவேண்டும் என்பதால், உடனே விசாரித்துமுடிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில், இதுவரை மூவர் இதே புகாரைக் கூறியுள்ளதாகவும் இவற்றின் மீது ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தற்போது விரிவான விசாரணை தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டும் எனக் கூறி, வரும் 15ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.