
கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என்று புதிய அரசு வந்ததும் உத்தரவிட்டது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனும் இதை வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
”மத்திய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது.” எனக் கூறிய நீதிமன்றம்,
”விதிகளின்படி தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும். தனியார் பள்ளிகள் கல்வி கட்டண விகிதங்களை வெளியிட மறுக்க முடியாது. தகவல் உரிமைச் சட்டப்படி விலக்களிக்கும் பிரிவில்கூட, பொது நலன் சார்ந்த விவரங்களை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று சுட்டிக்காட்டியுள்ளது.
கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல என்பதால், அதன் விவரங்களை சொல்லலாம் எனக் கூறியதுடன், இதில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 18ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.