காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது தொடர்பான மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், பூசிவாக்கத்தில் இரு நபர்களிடையே இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில் இந்த வழக்கின் மீது டிஎஸ்பி சங்கர் கணேஷ், ஒரு மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், டிஎஸ்பி மீது கடும் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், அவரை கைது செய்ய உத்தரவிட்டது. அதன்படி டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தின் கைது உத்தரவுக்கு எதிராக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
டிஎஸ்பி சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.