
தெருக்களின் சாதி பெயர்களை நீக்கும் அரசாணை செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்பதாக சி.பி.எம். கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
"தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், பிற பொது நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
சாதி பெயர்கள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் சமூக சீர்திருத்த நோக்கில் தமிழக அரசு 2025ம் ஆண்டு இந்த அரசாணையை பிறப்பித்தது. ஆனால், இந்த அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த தடையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கி, தமிழக அரசின் அரசாணை செல்லும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் கிராமப்புறங்கள், நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளில் இன்னும் சாதியின் பெயர்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற ஏராளமான கிராமங்கள், நகர்ப்புறங்களில் சாதியின் பெயர்களில் தெருக்கள், சாலைகள் உள்ளன. இத்தகைய பெயர்கள் மறைமுகமாக சாதிய அடையாளங்களையும், சில நேரங்களில் பிரிவினைகளையும் ஊக்குவிப்பதாகவே உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு சாதி பெயர்களை நீக்கும் அரசாணையை உடனடியாக அமல்படுத்தி தமிழகம் முழுவதும் சாதிகளின் பெயரில் உள்ள கிராமங்கள், குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள் ஆகியவற்றை அடையாளங்கண்டு அவற்றை நீக்கிவிட்டு பொருத்தமான தலைவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும்." என்று பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.