கல்லூரி சேர்க்கை இணையதளத்தில் சிக்கலா?- உயர்கல்வித் துறை சொல்லும் விளக்கம்!

lady willington instititue
லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரி
Published on

நடப்பு கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள முகவரியில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பத்திரிக்கைச் செய்திகளும் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில் உயர்கல்வித் துறை இதுகுறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த விளக்க அறிக்கை:

”தமிழ்நாட்டில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கை தொடர்பான இணையவழி விண்ணப்பப் பதிவு, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tngasa.in என்ற முகவரியின் மூலமாக நடைபெற்று வருகிறது.

இந்த இணையவழி விண்ணப்ப பதிவு 07.05.2025 அன்று தொடங்கி எவ்வித இடர்பாடும் இன்றி மாணவர்களின் பயன்பாட்டிற்காக தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. இதுவரை இந்த இணையதளத்தில் மொத்தமாக 2,07,915 மாணவர்கள் எந்தவித இடர்பாடுகளும் இன்றி  இணையவழியாக விண்ணப்பித்துள்ளனர். இதில், இதுவரை 81,923 மாணவர்கள் வெற்றிகரமாக சேர்க்கை பெற்றுள்ளனர். தற்போது மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை செயல்முறைகள் நடைபெறுகின்றன.

மேலும், முதுநிலை மற்றும் பி.எட். பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பப்பதிவும் தற்போது இந்த இணையதளத்தின் மூலமே தொடங்கப்பட்டு மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். செய்திதாளில் வெளிவந்துள்ள செய்திபோல் இந்த இணையதளத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை.

மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. www.tngasa.in என்ற இணையதளதில் மட்டும் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்  tndce.tn.gov.in  என்ற இணையதளம் மூலமும் சென்று இந்த மாணவர் சேர்க்கை www.tngasa.in என்ற இணையதளத்தை சென்றடையலாம். எனவே, செய்திதாளில் வெளிவந்துள்ள செய்தி குறித்து மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம்.” என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com