8 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச வெப்பநிலை!

8 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச வெப்பநிலை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. மீனம்பாக்கத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், நுங்கம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் வாட்டி வதைத்தது. சென்னை எண்ணூரில் 103 டிகிரி வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2003-ஆம் ஆண்டு சென்னையில் 113 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதே போல, கடந்த 2014ஆம் ஆண்டு 109.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்திய நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பிற இடங்களிலும் வெயில் வாட்டி வைத்தது.

அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திரூரில் 110.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடப்பாக்கம் மற்றும் வேலூரில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், திருத்தணி மற்றும் கரூர் - பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் கொளுத்தியதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மதுரை, திருச்சி, அருப்புக்கோட்டை, ஈரோடு மற்றும் கடலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், நாகை, ராமநாதபுரம் மற்றும் சேலம் மாவட்டங்களில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

மேலும், திருப்பத்தூர், தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலும் வெயில் சதமடித்தது. இதேபோல, புதுச்சேரியில் 106 டிகிரி பாரன்ஹீட் காரைக்காலில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com