
“நாங்கள் இன்னும் விமர்சிக்கவோ, அடிக்கவோ தொடங்கவில்லை. அதற்குள் அலறினால் எப்படி? அதனால் உங்களின் அரசவை புலவர்கள் இருந்தால், கர்சீப் கொண்டு அவர்கள் கண்ணீரை துடைத்துவிடுங்கள்.” என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், இன்று (நவம்பர் 23) காஞ்சிபுரம் மாவட்டத்தில் “மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பலத்த பாதுகாப்புடன் சுங்குவார் சத்திரம், ஶ்ரீபெரும்புதூர் ஜேப்பியர் தொழில்நுட்ப தனியார் கல்லூரி வளாகத்தைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் பவுன்சர்கள் பணியில் நிறுத்தப்பட்டு இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் விஜய் பேசியதாவது: “நாட்டுக்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார். பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார் என எம்ஜிஆர் பாட்டு பாடியிருப்பார். அப்படிப்பட்ட நம் அறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம் தான் இந்த காஞ்சிபுரம். தன்னுடைய வழிகாட்டி என்பதாலேயே தான் ஆரம்பதித்த கட்சி கொடியில் அண்ணாவை வைத்தவர் எம்ஜிஆர். ஆனால், அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியே இருந்தாலும் நாங்கள் அதை கண்டுகொள்ள போவதில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் நம் மீது வன்மத்துடன் இருக்கலாம். எங்களுக்கு அப்படியில்லை. ஆனால், என்னை, உங்களை எல்லோரையும் பொய் சொல்லி ஓட்டு போட வைத்து ஏமாற்றி, ஆட்சிக்கு வந்து, நல்லது செய்வது போல நாடகம் ஆடுகிறார்களே அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியும். அதனால் அவர்களை கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை.
காஞ்சிபுரத்துக்கும் நமக்கும் தெரிந்தோ தெரியாமலோ தொடர்பு உண்டு. ஏனென்றால் நம் முதல் களப்பயணத்தை தொடங்கியதே பரந்தூரில் தான். அந்த மண்ணில் நின்று, அந்த மக்களுக்காக கேள்வி கேட்டேன். அதன்பிறகு மன வேதனைக்குப் பிறகு தற்போது அண்ணா பிறந்த காஞ்சிபுரத்துக்கு வந்துள்ளேன். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
அதனால் தான் மக்களிடம் செல் என்று கூறிய அண்ணாவை கையிலெடுத்தோம். மக்களிடம் செல் என்று கூறிய அண்ணாவை மறந்தது யார்? கொள்கை எவ்வளவு கிலோ என்று கேட்கும் அளவுக்கு ஒரு கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். நமக்கு கொள்கை இல்லை என்று நம்மை பார்த்து கேட்கிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கோட்பாட்டை அறிவித்த எங்களுக்கு கோட்பாடு இல்லையா? சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நமக்கு கொள்கை இல்லையா? சிஏஏ-வை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா? வக்பு சட்டத்தை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா? கல்வியை மாநில பட்டியலுக்கு சேர்க்க கூறியும், அதற்கு இடைக்கால தீர்வு கூறிய நமக்கு கொள்கை இல்லையா? சமத்தும் சம வாய்ப்பு வழங்க கோரிய நமக்கு கொள்கை இல்லையா?
இவர்கள் கொள்கையே கொள்ளை தானே? எங்க கட்சி ஒன்றும் சங்கரமடம் இல்லை என சொன்னது யார்? அதை யார் சொன்னார்? எதற்கு சொன்னார்? இப்போது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை யோசித்து பாருங்கள். அதனால் பவள விழா பாப்பா, பாசாங்கு காட்டாதே பாப்பா, நீ நல்லவர் போல் நடிப்பதை பார்த்து நாடே சிரிக்குது பாப்பா என சொன்னோம்.
இன்னும் நாங்கள் விமர்சிக்கவோ, அடிக்கவோ தொடங்கவில்லை. அதற்குள் அலறினால் எப்படி? அதனால் உங்களின் அரசவை புலவர்கள் இருந்தால், கர்சீப் கொண்டு அவர்கள் கண்ணீரை துடைத்துவிடுங்கள்.
காஞ்சிபுரத்தை வாழ வைக்கும் உயிர் நதி பாலாறு. மக்களின் ரத்ததுடன் கலந்து ஓடும் ஆறு பாலாறு. பெரியார், அண்ணா பெயரை வைத்து ஆட்சி செய்பவர்கள் பாலாற்றை சுரண்டி, நாசம் செய்து அழித்துவிட்டார்கள். ஆதாரத்துடன் கூறுகிறேன். அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி 22 லட்சத்து 70 ஆயிரம் மணலை கொள்ளை அடித்துள்ளார்கள். இதன் மூலம் ரூ.4,730 கோடி கொள்ளை அடித்துள்ளார்கள். இந்த ஆதாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அமலாக்கத்துறையிடம் உள்ளது.
மணலை கொள்ளையடித்தால், விவசாயம் அழியும். விவசாயிகள் அழிந்துவிடுவார்கள். சின்டிகேட் போட்டு கொள்ளையடிக்கிறார்கள். காஞ்சிபுரம் பட்டு என்றால் உலகத்துக்கே தெரியும். ஆனால், அதை தயாரிக்கும் நெசவாளர்கள் வாழ்க்கை துன்பத்தில் உள்ளது. அவர்களின் ஒருநாள் கூலி ரூ.500 தான். அதற்காக போராடி ஒன்றும் நடக்கவில்லை. டெல்டாவில் விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்டது போல கைத்தறி நெசவாளர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்60 வருடத்துக்கு முன்பு கட்டியது தான் காஞ்சிபுரம் பேருந்து நிலையம். இன்னும் அதை புதுப்பிக்கவில்லை. கேட்டால் அந்த இடத்தில் வழக்கு உள்ளது என்பார்கள். அரசாங்கத்தால் வேறு இடத்தில் பேருந்து நிலையம் அமைத்து தர முடியாதா? அவர்களுக்கு மக்கள் குறித்து சிந்திக்க நேரமில்லை. வாலாஜா பாத் அருகில் அவளூர் ஏரி உள்ளது. அங்கு தடுப்பணை கட்ட வேண்டும்.
இதே காஞ்சிபுரத்தில் தான் பரந்தூர் விமான நிலையம் கட்டும் பிரச்சினை உள்ளது. இதில் நாங்கள் விவசாயிகள் உடன் நிற்போம். அதில் சந்தேகம் இல்லை. அரசு இதிலிருந்து தப்பிக்க முடியாது. சட்டசபை தொடங்கி சாதாரண நிகழ்ச்சி வரை தவெகவை தான் ஆட்சியாளர்கள் குறிவைக்கிறார்கள். தவெக ஆட்சிக்கு வந்தால்.. வருவோம்.. மக்கள் நம்மை வரவேற்பார்கள்..
எங்கள் ஆட்சி அமைந்தால், அனைவருக்கும் வீடு கட்டி கொடுப்போம். வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் கொடுப்போம். கார் வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதியை ஏற்படுத்துவோம். பட்டதாரிகள் உருவாக வேண்டும். அரசு மருத்துவமனைக்கு மக்கள் வரும் வகையில் மாற்ற வேண்டும். மீனவர்கள், நெசவாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கருத்து கேட்டு அதனை செயல்படுத்துவோம். சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். அண்ணா பல்கலைகழகம், கோவை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும். இதை செயல்படுத்துவது குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படும்” என்றார்.