
கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், பாஜகவுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கிறது.
தமிழகத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்கிறார்.
இந்த பின்னணியில் தமிழகத்துக்கு 2 நாட்கள் பயணமாக அமித்ஷா கடந்த 4 ஆம் தேதி வருகை தந்தார். திருச்சியில் தங்கியிருந்த அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிகள் எத்தனை என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இன்று அதிமுக கூட்டணியில் பாமக இணைந்த நிலயில், அதிமுக- பாஜக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிகளை முடிவு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் அமித்ஷா வீட்டில் இன்று இரவு நடைபெற உள்ளது. இதற்காக எஸ்.பி.வேலுமணி, நேற்றே டெல்லி சென்றுவிட்டார். இன்று பிற்பகல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அமித்ஷாவை அவரது இல்லத்தில் இன்று இரவு எடப்பாடி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, அதிமுக- பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்படலாம் என கூறப்படுக்கிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. தற்போதைய தேர்தலில் அதிமுகவிடம் அதிக தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.