
ஹைதராபாத்தில் உள்ள சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை சூட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக மாற்றும் நோக்கில், மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பல புதிய திட்டத்தை செயல்படுத்துகிறது.
இதன் ஒரு பகுதியாக நகரின் முக்கிய சாலைகளுக்கு உலகளாவிய தலைவர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் பெயர்களை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ள சாலைக்கு “Donald Trump Avenue” என்று பெயர் சூட்டப்படும். ஒரு அமெரிக்க அதிபரின் பெயர் வெளிநாட்டில் சாலைக்கு வைக்கப்படுவது இதுவே முதல்முறை என தெலுங்கானா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கேட்டு மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு கடிதம் அனுப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத் வெளிப்புற வட்டச் சாலையில் உள்ள ரவிர்யால் சந்திப்பை (ஏற்கனவே “Tata Interchange” என்று பெயரிடப்பட்டது) ரீஜினல் ரிங் ரோடு உடன் இணைக்கும் 41.5 கி.மீ. நீளமுள்ள புதிய பசுமைத் தளக் குறுக்கு சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
காச்சிகுடாவில் அமெரிக்காவுக்கு வெளியே கூகுளின் மிகப்பெரிய கேம்பஸ் அமைந்துள்ள பகுதியில் உள்ள சாலை “Google Street” எனப் பெயரிடப்படும். கூகுள் மேப்ஸ் உலகளவில் வழிகாட்டியாக இருப்பதை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மைக்ரோசாப்ட், விப்ரோ உள்ளிட்ட புகழ் பெற்ற நிறுவனங்களின் பெயரில் சாலைகளுக்கு பெயரிட திட்டமிடப்பட்டுள்ளது.
இது போன்ற பல பிரபல உலக நிறுவனங்களின் பெயர்களில் சாலைகளும் சந்திப்புகளும் பெயரிடப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பெயர்கள் மூலம் உலகளாவிய நிறுவனங்கள் தெலுங்கானாவில் முதலீடு செய்ய முன்னுரிமை அளிக்கும், ஹைதராபாத் உலகின் முக்கிய இன்னோவேஷன் மையமாக உருவாகும் என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற அமெரிக்க-இந்தியா ஸ்ட்ராட்டஜிக் பார்ட்னர்ஷிப் மன்றத்தின் (USISPF) ஆண்டு மாநாட்டில் முதலமைச்சர் முன்வைத்த யோசனையின் தொடர்ச்சியாகும்.