அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

“ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

“ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன்”என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, அண்ணா மேம்பாலம், மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கண்ணகி சிலை ஆகிய இடங்களுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.4.27 கோடிக்கு நீட், ஜே.இ.இ. நுழைவு தேர்வு பயிற்சிக்கு தேவையில்லாமல் செலவு செய்ததாக சி.ஏ.ஜி. அறிக்கை கொடுத்துள்ளது. மாணவர்களுக்கு ரூ.3.25 கோடிக்கு புத்தகம் வாங்கி யாருக்கும் வழங்காமல் வீண் செலவு செய்துள்ளனர். மேலும், ரூ. 2.15 கோடி செலவில் வழிகாட்டி புத்தகங்கள் மறுகொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 385 பயிற்சி மையங்களுக்கு தலா ரூ. 55,000 செலவில் வாங்கப்பட்ட டிஷ் ஆண்டனாக்கள் 2018, 19 ஆகிய ஆண்டுகளில் 103 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த திட்டமிடலும் இல்லாமல் வீண் செலவு செய்திருப்பதாக சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஆசிரியர் சங்க உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது. அனைவரும் சேர்ந்து ஒருமித்த கருத்துடன் என்னை சந்திக்க வாருங்கள். ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த நான் இன்று காலை 8.30 மணி வரை எனது அலுவலகத்தில் காத்திருந்தேன். ஆசிரியர்களுக்காக எனது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com