
“நான் இன்று சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறேன் என்றால் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் தயாளு அம்மாள் தான்” என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தி.மு.க. 75 அறிவுத் திருவிழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: “கருணாநிதியோடு நீண்ட காலம் இருந்தவன். ஸ்டாலினை இளம்வயதிலிருந்தே அறிந்தவன். ஆனாலும், நானே வியக்கும் அளவுக்கு, போற்றும் அளவுக்கு, வணக்கம் வைக்கும் அளவுக்கு அவர் தன்னுடைய பணிகளை ஆற்றுகிறார். காரணம் அவர் கருணாநிதியிடம் கற்றவர். இந்த இடத்துக்கு நிச்சயம் உதயநிதி வருவார். அப்படி வருகிறபோது, கலைஞர், ஸ்டாலின் பெற்ற பெயர் புகழை விட அதிகமான பெயர் புகழை பெறுவார்.
ராஜராஜனுக்கு பிறகு ராஜேந்திர சோழன் மன்னரானார். ராஜராஜனுக்கு காந்தளூர்ச்சாலை வரை ஆட்சி இருந்தது. ஆனால், அவரது மகன் ராஜேந்திர சோழன் தாய்லாந்து வரை தனது ஆட்சியை நிறுவினார். உதயநிதி ஒருநாள் ராஜேந்திர சோழனாக மாறுவார். இது என்னுடைய அரசியல் கணக்கு. எதை செய்தாலும் உதயநிதி சரியாக செய்கிறார்.
நான் இன்று சட்டமன்ற உறுப்பினராக இருக்கலாம். 1971 தேர்தலுக்கு முன்னர் ஒருமுறை கலைஞரும் நானும் அவரின் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். “துரை போன முறையே நீ சீட்டு கேட்ட… இந்த முறை நிக்குறீயானு...?” கேட்டார். ”எனக்கு சீட்டெல்லாம் வேண்டாம். நான் வக்கீலா இருக்கேன். அதான் எனக்கு பிடிக்குது” என்றேன். “அப்போ உனக்கு வேண்டாம்” என்றார். உடனே நான் கை கழுவ வந்தேன். அங்கே தயாளு அம்மாள் இருந்தாங்க. “ஏன் தம்பி.. சீட் வேணானு சொல்றீங்க…” என்றார். “என்னால அவ்வளவு செலவு பண்ண முடியாதுனு..” சொன்னேன். ”அவரு கொடுப்பாரு… நீ நில்லுனு...” சொன்னவங்க ரூ.10 ஆயிரம் கொடுத்தார்.
நான் இன்று எம்.எல்.ஏ.வாகவும் அமைச்சராகவும், திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறேன் என்றால் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் தயாளு அம்மாள்.” என்றார்.