சீட்டே வேண்டாம்... போட்டியிலிருந்து ஒதுங்கும் அண்ணாமலை?

பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை
Published on

தொகுதி ஒதுக்கீட்டில் கடும் அதிருப்தியடைந்ததால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த முறையை விட இந்த முறை அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால், இத பாசிட்டிவ் விஷயமாக தோன்றும். ஆனால், உண்மையில் இதில் பாஜகவுக்கு எதிரான அரசியல் இருக்கிறது என்று அண்ணாமலை அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

அதிமுக ஒதுக்கிய தொகுதிகள் குறித்து, அண்ணாமலை தனது கடும் அதிருப்தியை கட்சியின் தேசியத் தலைமையிடம் தெரிவித்துள்ளார். கோவையில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட ஆர்வமாக இருந்தார். ஆனால், கோவையில் ஒரு தொகுதி மட்டுமே பாஜகவுக்கு கொடுக்கப்பட்டது. இதில் சிட்டிங் எம்எல்ஏ வானதி சீனிவாசன்தான் மீண்டும் களமிறங்க இருக்கிறார். எனவே அண்ணாமலைக்கு கோவையில் சீட் உறுதியில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

இந்த அதிருப்தி ஒருபுறம் எனில், மறுபுறம் மொத்தமாக தொகுதி பங்கீட்டில் அதிமுக முதுகில் குத்திவிட்டது என்று அண்ணாமலை புலம்பியிருக்கிறார்.

தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தான் முடிவெடுத்துள்ளதால், தனக்கென எந்தத் தொகுதியையும் ஒதுக்க வேண்டாம் என்றும் அவர் கட்சித் தலைமையிடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களுக்காகவும் ஒரு கட்சித் தொண்டராக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக தனது மற்ற 2 கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்த பின்னரே, பாஜகவின் விருப்பத் தொகுதிகள் குறித்துக் கேட்கப்பட்டது என்பதால் அண்ணாமலை அதிருப்தி அடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது வகிக்கும் தொகுதிகளைக் கோரக்கூடாது என்ற நிபந்தனையால், பாஜகவின் தேர்வுக்கான வாய்ப்புகளும் வெற்றி வாய்ப்புகளும் வரையறுக்கப்பட்டுவிட்டன என்று அவர் கட்சித் தலைமையிடம் கூறியுள்ளார்.

பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள், கட்சி வளர்ந்து வரும் அல்லது வளர வாய்ப்புள்ள தொகுதிகளாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். திருவண்ணாமலை போன்ற தொகுதிகள் பாஜகவுக்கு வழங்கப்படுவது, ஆளுங்கட்சியான திமுகவுக்கே சாதகமாக அமையும் என்று அவர் கூறியதாகத் தெரிகிறது.

அதேபோல், திமுக அமைச்சர்கள் தற்போது வகிக்கும் மூன்று தொகுதிகளும், கடந்த 20 ஆண்டுகளில் அதிமுக வெற்றிபெறாத இரண்டு தொகுதிகளும் தமாகாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் புதிய நீதி கட்சி ஆகியவற்றுக்கும் சாதகமற்ற தொகுதிகளே வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, பொதுத் தொகுதியான ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மே 4-ஆம் தேதி கட்சித் தலைமையைச் சந்தித்து, இதுகுறித்து ஒரு முடிவெடுக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே கோவையில் தன்னை எடப்பாடி பழனிசாமி போட்டியிட வைக்காதது குறித்து அதிருப்தியில் இருந்த அண்ணாமலை, தொகுதி பங்கீடு விஷயத்தை சீரியஸாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com