53 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறேன் என்னை யாரும் இயக்க முடியாது – செங்கோட்டையன்

செங்கோட்டையன்
செங்கோட்டையன்
Published on

53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். என்னை யாரும் இயக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுகவில் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்தின் எந்த அடிப்படையில் புகார் கொடுத்தீர்கள்? புகாரில் என்ன கூறியுள்ளீர்கள்?

பின்னால் அதுகுறித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், பொறுத்திருந்து பாருங்கள் நல்லதே நடக்கும். 258 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை எப்படி சொல்ல முடியும். தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதம் குறித்து சொல்லக்கூடாது.

அதிமுக எந்தமாதிரியான குடும்ப கட்சியாக இருக்கிறது?

அதிமுக குடும்ப கட்சியாக இயங்கி வருவது உங்களுக்கே தெரியும்.

உங்களை பாஜக இயக்குகிறதா..? 

53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். என்னை தனிப்பட்ட முறையில் யாரும் இயக்க முடியாது. அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்.

மூத்த அரசியல்வாதியான உங்களை மட்டும் கட்சியில் இருந்து நீக்கியதை எப்படி பார்க்கிறீர்கள்?

இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்...?

அது அவர்களுடைய விருப்பம்

குடும்ப ஆதிக்கம் இருக்கிறது என்றால் அது எது மாதிரியான ஆதிக்கம்?

மகன், மைத்துனர், மருமகன் தொகுதிகளுக்குள் வருவதும், எங்கு எங்கு எப்படி செயல்படுகிறார்கள், யாரையெல்லாம் எப்படி இயக்குகிறார்கள் என்பது செய்தியாளர்களுக்கு தெரியும். நான் அதைத்தான் சொன்னேன். அவர்களது செயல்பாடுகளால் மூத்த நிர்வாகிகளுக்கு அது இடையூறாக இருக்கும்.

அதிமுக மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக திமுகவில் இணைந்து வருவதால் அதிமுக கரைந்து கொண்டே வருகிறதா?

அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் தலைவர்கள் யாராவது உங்களுடன் பேசுகிறார்களா? உங்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசுகிறார்களா?

யார் யார் பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கும் எனக்கு மட்டும்தான் தெரியும். அதனை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது என செங்கோட்டையன் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com