நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“குழந்தைகளுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்டதால் குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது.” என்று கூறினார்.
சென்னை மயிலாப்பூா் புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்றுள்ளார்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு, மாணவர்களுக்கு உணவைப் பரிமாறிய முதலமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், பகவந்த் மான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “இன்றைய நாள் என் மனதுக்கு நிறைவான நாள். மகிழ்ச்சிக்குரிய நாள். குழந்தைகளுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்டதால் குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது. எப்படி இன்றைக்கு முழுவதும் ஆக்டிவாக இருக்கிறீர்களோ; அதுபோல நானும் இன்று முழுவதும் ஆக்டிவாக இருப்பேன். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள் என்றால் இதைவிட மனநிறைவு வேறு என்ன இருக்கப்போகிறது.
நாடே திரும்பிப் பார்க்கும் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைக்க அப்போதைய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார். இப்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் வருகை தந்துள்ளார். திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாடே உற்றுநோக்குகிறது.
மாணவர்களுக்கு கல்வி அறிவு வழங்குவது மட்டுமின்றி அவர்களின் பசியையும் போக்க வேண்டும். இனி பள்ளிக்கு வரும் மாணவர்கள் சோர்வுடன் வரமாட்டார்கள், முக மலர்ச்சியுடன்தான் வருவார்கள். இந்தத் திட்டத்தால் மாணவர்களின் வயிறு மட்டும் நிரம்பவில்லை, அவர்கள் உடல்நிலையும் மேம்படுகிறது.
20 லட்சம் மாணவர்கள் சூடான, சுவையான, சத்தான உணவை சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு செல்வார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆண்டொன்றுக்கு ரூ.600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை செலவு என நான் சொல்ல மாட்டேன்.. இது சிறப்பான சமூக முதலீடு.
எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமுதாயத்திற்கு தரப்போகும் முதலீடு. மாணவச் செல்வங்களின் திறமை அறிவு, ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து இந்த முதலீட்டை தமிழ்நாடு அரசு செய்கிறது. நீங்கள் எல்லோரும் படித்து முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றினால் அதுதான் இந்த திட்டத்தின் உண்மையான வெற்றி. காலை உணவுத் திட்டத்தை நானே நேரடியாக கண்காணித்து வருகிறேன்.
இத்திட்டத்தால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் அதிகரிப்பு, வருகைப் பதிவு உயர்வு, நோய்த்தொற்று ஏற்படுவதும் குறைந்துள்ளது. பல நாடுகளில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளன, இதுதான் நம் சாதனை. எல்லா துறைகளிலும் தமிழ்நாட்டை நம்பர் 1 ஆக்குவதே எனது இலக்கு.” இவ்வாறு அவர் கூறினார்.