காவல் துறையைக் கவனிக்கக்கூடிய உள்துறையின் செயலாளர் பதவியிலிருந்து அமுதா மாற்றப்பட்டு, வருவாய்த் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்தே ஐ.பி.எஸ். மட்ட காவல் பணி அதிகாரிகள் பலர் அதிரடியாக மாற்றப்பட்டனர். குறிப்பாக, சென்னை மாநகரக் காவல்துறை ஆணயராக இருந்த டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கூடுதல் டி.ஜி.பி. அருண் நியமிக்கப்பட்டார். சம்பவம் நிகழ்ந்த வடசென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க்கும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், காவல்துறைக்கு ஆணையிட்டு அதன் நடவடிக்கைகளை நெறிப்படுத்தக்கூடிய உள்துறைச் செயலாளர் பதவியிலிருக்கும் அமுதா இன்று வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம், முக்கியத்துவம் உள்ளதாகக் கருதப்படும் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறைக்கே அவர் மாற்றப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, கடந்த மாதக் கடைசியில், வீரப்பன் வழக்கில் இரட்டைப் பதவி உயர்வு பெற்ற வெள்ளதுரை கூடுதல் டி.எஸ்.பி.யாக ஓய்வுபெறுவதற்கு முன்னாளில் அவரை இடைநீக்கம் செய்து அமுதா உத்தரவிட்டார். பின்னர் ஒரே நாளில் அந்த உத்தரவை அவரே திரும்பப்பெற்றார். இது ஆட்சிரீதியாக கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அமுதாவின் இந்த மாற்றத்துடன், பல கூடுதல் தலைமைச்செயலாளர் நிலை அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன், பழையபடி உணவு, கூட்டுறவுத் துறைக்குச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருக்கும் கே.கோபால் கால்நடை, மீன்வளத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முதன்மைச்செயலாளர் நிலை அமுதா வகித்த உள்துறை பதவிக்கு கூடுதல் தலைமைச்செயலாளர் தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்துவரும் தகவல்நுட்பத் துறைச் செயலாளர் பதவிக்கு அவருடைய நிலை மூத்த அதிகாரியேயான தொழிலாளர் நலத் துறைச் செயலாளர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித் துறைச் செயலாளராக சிட்கோ நிர்வாக இயக்குநர் மதுமதி நியமிக்கப்பட்டுள்ளார்; அப்பதவியில் இருக்கும் குமரகுருபரன் சென்னை, மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன்னர் பொறியியல் கல்வி சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் வீர ராகவ ராவ், தொழிலாளர் நலத் துறையின் செயலாளராக ஆக்கப்பட்டுள்ளார்.
உணவுபொருள் வழங்கல் ஆணையராக இருக்கும் ஹர்சகாய் மீனா, சிறப்பு முயற்சிகள் துறையின் செயலாளராக ஆக்கப்பட்டுள்ளார்.
வருவாய்த் துறைச் செயலாளர் வி.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.