
“பொண்டாட்டி சொல்வதைக் கேட்டு நடக்கணும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் அண்ணா திருமண மாளிகை திறப்பு விழா மற்றும் 15 இணையர்களுக்கான திருமண விழா இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
“கொளத்தூருக்கு வந்தாலே எனக்கு ஒரு தனி ‘எனர்ஜி’ மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பதைத் தாண்டி, உங்களில் ஒருவனாக, “உங்கள் வீட்டுப் பிள்ளை”யாகவே இங்கு வருகிறேன். கொளத்தூர் என்று பெயர் சொன்னாலே சாதனை அல்லது ஸ்டாலின் என்றுதான் சொல்வார்கள்.
கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் செய்து விட்டோம், மற்ற தொகுதிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று நினைக்க வேண்டாம். எல்லா தொகுதியும் நம்முடைய தொகுதிதான்.
10 நாளைக்கு ஒருமுறை கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் தான் எனக்கு முழு திருப்தி. ஒருவேளை நான் வரவில்லை என்றால் இந்த தொகுதிக்கான பட்டியலுடன் சேகர்பாபு என்னை வந்து சந்தித்துவிடுவார்” என்று கூறினார்.
மேலும் அவர், “ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறார் என்பதற்குத் தனது மனைவியே உதாரணம். ஓராண்டு காலம் மிசாவில் நான் சிறையில் இருந்த போது அப்செட் ஆகி ஏதாவது ஒரு முடிவெடுத்திருந்தால் என் நிலைமை என்னவாகியிருக்கும் நினைத்து பாருங்கள்.
பல்வேறு இன்னல்களை தாங்கிக் கொண்டு பொறுமையாக இருந்து என்னை ஊக்கப்படுத்தியதால் தான் நான் இன்று இந்த நிலைமையில் இருக்கிறேன்.
பொண்டாட்டி சொல்வதைக் கேட்டு நடக்கணும். பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்ட வேண்டும்.” என்று மணமக்களைக் கேட்டுக்கொண்டார் முதலமைச்சர்.