முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சமூகநீதிக்குத் துரோகம்... மு.க.ஸ்டாலின் வீடியோ!

“விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 13ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் 5 நாள்களே இருக்கும் நிலையில், தற்போது அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

”விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மண்ணின் மைந்தரான திமுக வேட்பாளர் ஆற்றல்மிக்க அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றக் கூடிய வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரிக்க வேண்டும். சாதனைகளால் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் திமுகவை ஆதரியுங்கள்.

வன்னியர் உட்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 20% உள்ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. ஆட்சி. 1987 போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியான போராளிகளுக்கு நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க. கூட்டணியை விக்கிரவாண்டி தொகுதியில் தோற்கடிக்க வேண்டும். சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.” என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com