விஜய் அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் செந்தில் பாலாஜி கூறியதாவது: “கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த துயர சம்பவம் மிகவும் துயரமானது. யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது. அந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு கரூர் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி. 29 ஆண்டுகளாக பொது வாழ்வில் இருக்கிறேன். 1996ஆம் ஆண்டு பொது வாழ்வு தொடங்கியது.
கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் இதுவரை நடக்காத ஒன்று. வரும் காலத்தில் இதுபோன்ற துயர சம்பவம் கரூரில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கேயும் நடக்காத அளவிற்கு, அனைவரும் சேர்ந்து இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இதபோன்ற துயர சம்பவம் தமிழகத்தில் எங்கேயும் வரும் காலத்தில் நடக்க கூடாது.
மக்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது கூட்டத்தை நடத்தும் அரசியல் கட்சியினரின் பொறுப்பு. வேலுச்சாமிபுரத்தில் அவர்கள் வருவதாகக் குறிப்பிட்ட 12 மணிக்கு, சுமார் 5,000 பேர் திரண்டிருந்தனர். நேரம் செல்லச்செல்ல, பணி முடிந்து மக்கள் அதிகமாகத் திரண்டனர்.
தவெக.,வினர் ஏற்பாடு செய்திருந்த ஜெனரேட்டர் ஆப் ஆன போதும், மின் விளக்குகள் அணையவில்லை. அங்கு மின்தடை ஏற்படவில்லை. விஜய் பேசிக்கொண்டிருந்த போதே மக்கள் தண்ணீர் கேட்டு கூச்சலிட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.
கரூரில் மட்டும் ஏன் நடந்தது என்று கேட்கிறார். அவரது அனைத்து பிரசாரத்திலும் மக்கள் மயக்கமடைந்த சம்பவங்கள் நடந்தன. அதனை சரி செய்யும் சூழலை அவர்கள் உருவாக்கவில்லை. போலீசாரின் எந்த பேச்சையும் கேட்கவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.
கரூரில் மட்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி என விஜய் கேள்வி எழுப்பி உள்ளாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “பொதுவாக அரசியலாக பார்க்க விரும்பவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் நீட்டப்பட்டது. உயிரிழந்த 41 பேரில், 31 பேர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 27 குடும்பங்களை சார்ந்தது. யார் மீது தவறு என பேசாமல் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும்.
எந்த அரசியல் கட்சியின் கூட்டாக இருந்தாலும் இனி இதுபோன்று நடக்க கூடாது. வேலுச்சாமி புரத்தில் 1000 முதல் 2000 செருப்புகள் வீதியில் கிடந்தன. ஆனால் ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை. இதில் இருந்தே தெரிகிறது.
மக்களுக்கு குடிநீரோ, பிஸ்கட், பாக்கெட்டோ வழங்கப்படவில்லை. விஜய் அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.” என்றார்.