நாயை முற்றிலுமாக ஒழிப்பதால், எலிகள் பெருகி பிளேக் நோய் பரவும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், தெருநாய் பிரச்னைகள் குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. அதற்கு, "இதில் கமல்ஹாசன் அவர்கள் கூறியது போல, கழுதை, சிட்டுக் குருவி, வண்ணத்துப் பூச்சிகள் போன்றவை அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது. நாம் எந்த அழிவிற்கும் கவலைப்படவில்லை. நாம் சக மனிதன் சாவையே சகித்துக் கொண்டு தான் செல்கிறோம். நாயை முற்றிலுமாக ஒழிப்பதால், எலிகள் பெருகும். பிளேக் நோய்கள் பெருகக் கூடிய ஆபத்து இருக்கிறது. எதையும் ஒரு சம நிலையில் வைக்க வேண்டும். இதற்காக மாநகராட்சி முறையாக நாய்களை பராமரித்து தடுப்பூசி செலுத்த வேண்டும்.
நீங்கள் அதைத் தெரு நாய் எனக் கூறுகிறீர்கள், ஆனால் அது தான் நம்முடைய வீட்டு நாய். நாம் வெளிநாடுகளில் இருக்கக் கூடிய உயர் தர நாய்களை வீட்டிற்குள் கொண்டு வந்ததால் இவைகள் தெரு நாய்கள் ஆகிவிட்டது. நம் நாட்டு நாய்களின் பராமரிப்பு செலவு மிகவும் கம்மி, நாம் உண்டது போக மிச்ச மீதிகளை தான் அதற்கு கொடுப்போம், வீட்டு வாசலில் கிடப்பான், பாதுகாப்பாகவும் இருப்பான். நம்மோடு ஆடு, மாடு மேய்க்க வருவான், வேட்டைக்கும் செல்வான்.
ஆனால் இவர்கள் வளர்க்கும் நாய்க்கு உண்ணும் பிஸ்கட்டும் தனி; மருத்துவமும் தனி. அவர்கள் வாங்கும் அந்த நாய் குட்டிகள் 25 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. இது ஒரு பெரிய சந்தை.
என் நாயை தெருவில் போட்டு விட்டு அவனின் நாயை வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டான். உரிய பராமரிப்பு இல்லாததாலேயே இவ்வளவு நாய்கள் பெருகிவிட்டன.
ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஏழைகளைக் கொன்று விட முடியுமா?, குடிசை இல்லா வீடுகள் வேண்டும் என்பதற்காக குடிசைகளை தீ வைத்து கொளுத்தி விட முடியுமா? அரசாங்கம் தான் இதை சரி செய்ய வேண்டும்" என்றார்.