கரூரில் 41 பேர் பலியான துயரத்துக்குப் பின்னர் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (டிசம்பர் 18) பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில், அவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனம் ஈர்த்துள்ளன.
கரூரில் செப்டம்பர் 27 தேதி விஜய் மேற்கொண்ட பிரசார நிகழ்ச்சியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் ரோடு ஷோ நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அண்மையில் காஞ்சிபுரம் அருகே தனியார் கல்லூரி உள் அரங்கு கூட்டத்தில் அப்பகுதி மக்கள், தவெக தொண்டர்களை விஜய் சந்தித்தார்.
பின்னர் டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியில் பொதுமேடையில் பிரசாரம் செய்தார். இந்நிலையில் இன்று ஈரோட்டில் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். கரூர் துயரத்துக்குப் பின்னர் தமிழ்நாட்டில் விஜய், பொதுமேடையில் மேற்கொள்ளும் முதல் பிரசாரம் இது.
ஈரோடு பெருந்துறை சரளை பகுதியில் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் நடைபெறுகிறது. திறந்தவெளியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பவர்கள் ஒவ்வொரு பகுதியாக இரும்பு தடுப்புகளுக்குள் அடைக்கப்படுவர். விஜய்யை நெருங்க முயற்சிப்பதை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்டவைகளும் செய்யப்பட்டுள்ளன.
விஜய்யின் இன்றைய பிரசாரத்துக்கு 2 மணி நேரம் மட்டுமே போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர். விஜய்யின் இன்றைய பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் தான் செய்துள்ளார். இந்நிகழ்ச்சிக்கு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த விஜய், அங்கிருந்து ஈரோட்டு காரில் செல்கிறார். பொதுக்கூட்ட மேடைக்கு 11.30 மணிக்கு வருகிறார் விஜய்.
இந்த நிலையில், ஈரோட்டில் விஜய்க்கு எதிராக நிறைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள. அந்த போஸ்டர்களில் ’ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களே’, இங்க இருக்கும் கரூருக்கு போகல ஆன ஆடியோ வெளியீட்டுக்கு மலேசியா போறீங்க’ என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.