கோப்புப் படம்
கோப்புப் படம்

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்- விவசாயிகள் சங்கம்!

“பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அனைத்துப் பயிர்களுக்கும் நிவாரணம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி நடராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

”மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாயினர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தமிழ்நாடு அரசு நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதைத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.

கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நிவாரண தொகை அனைத்து இனங்களிலும் உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அனைத்துப் பயிர்களுக்கும் நிவாரணம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கிடவும், புயல் வெள்ளத்தினால் உயிரிழந்த குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8000 வழங்கிடவும், மழையினால் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் உள்ளிட்ட இறவை பாசனப்பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17000 வழங்கிடவும், 33 சதவீதத்திற்கு மேல் சேதமடைந்த பயிர்கள் - பல்லாண்டு பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22500 வழங்கிடவும், 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8500 வழங்கிடவும் அதே போல் எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்பிற்கு நிவாரணமாக ரூ.37500 வழங்கிடவும், வெள்ளாடு - செம்மறி ஆடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4000 வழங்கிடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு கோரியுள்ள தொகையை முழுமையாகவும், தாமதமில்லாமலும் வழங்க முன்வரவேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com