சுதந்திர தின உரை… முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன?
குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் வகையில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் வரும் பொங்கல் தினம் முதல் செயல்படுத்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
78ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசி கொடி ஏற்றுவதற்காக இன்று காலை கோட்டைக்கு வந்தார். அவரை தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, முப்படை அதிகாரிகளை தலைமை செயலா் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.
காவல்துறையின் மரியாதையை ஏற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. 2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000 அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
இந்த நாளில் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பொதுப்பெயர் வகை மருந்துகள் மற்றும் பிற மருந்துகளைக் குறைந்த விலையில் வழங்கும் ’முதல்வர் மருந்தகம்’ திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும்.
முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் காக்க, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் ரூ. 1 கோடி கடன் வழங்கப்படும்.
தியாகிகள் ஓய்வூதியம் ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக அதிகரிப்பு. கட்டபொம்மன், வ.உ.சி. மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ. 10,500 ஆக உயர்த்தப்படும்.
வயநாடு சம்பவத்தின் எதிரொலியாக, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி பகுதிகள், ஏற்காடு மற்றும் ஏலகிரியை உள்ளடக்கிய மலைப் பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். என்றார்.