இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் 3 முடிவுகள்!

இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் 3 முடிவுகள்!
Published on

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் பற்றி தெரிவித்துள்ளார்.

அதன் விவரம்:

”ஒற்றுமையே பலம்:

எவ்விதக் கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்காமல், 'ஒற்றைப் படை வீரனைப் போல' ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியும் காங்கிரஸோடு முழுமையாக இணைந்து கூட்டணியை முன்னெடுத்துச் செல்வதாக உறுதியளித்தார்.

முக்கியத் தீர்மானங்கள்:

'எஸ்.ஐ.ஆர்' (SIR) விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்குத் தாக்கல் செய்வது.

லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரும் வேதனைக்குள்ளாக்கிய விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

நாட்டில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதிக்க, மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

அடுத்தகட்ட நகர்வுகள்:

இந்தியா கூட்டணிக் கூட்டத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்துவதெனவும், அடுத்த கூட்டத்தை ஆகஸ்ட் 8-ம் தேதி வாக்கில் ஹைதராபாத்தில் கூட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

23-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் நேற்றிலும், ஆன்லைன் வாயிலாகவும் பங்கேற்ற இக்கூட்டம் மிகுந்த மனநிறைவை அளித்தது. முரண்பாடுகளின்றி அனைவரும் ஒத்த கருத்துடையவர்களாகத் திகழ்வதில் பெருமிதம் கொள்கிறேன்!” என்று வைகோ கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com