முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்: மும்பை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார்.

மணிப்பூரில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடங்கி 63 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயணம் 14 மாநிலங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலையுடன் இந்திய ஒற்றுமை நீதி பயணம் நிறைவு செய்ய உள்ள நிலையில், பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்றுள்ளார். மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்யா பூமியில் இந்த பயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார்.

இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவையொட்டி, நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மும்பையில் நடைபெறும் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்றிரவே மும்பையிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

logo
Andhimazhai
www.andhimazhai.com