கடலுக்குள் 23 கி.மீ. தொலைவுக்குப் பாலம், இரயில்பாதை : இந்தியா, இலங்கை புதிய உடன்பாடு!

கடலுக்குள் 23 கி.மீ. தொலைவுக்குப் பாலம், இரயில்பாதை : இந்தியா, இலங்கை புதிய உடன்பாடு!
Published on

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல்வழியாகப் பாலம் அமைப்பது தொடர்பாக இரு நாடுகளின் அரசுமட்டக் குழுக்கள் புதிய உடன்பாட்டைச் செய்துள்ளன. 

இந்தியாவின் இராமேசுவரம்-தனுஷ்கோடி முனையிலிருந்து கடல்வழியாக இலங்கையின் தலைமன்னார் வரை கடலுக்குள் பாலம் அமைப்பது என இரு நாடுகளின் அரசுகளும் தீர்மானித்தன. கடந்த 2015ஆம் ஆண்டில் அப்போதைய மைய அரசின் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் இலங்கை பிரதமராக அப்போது இருந்த இப்போதைய அந்நாட்டு அதிபர் இரணில் விக்கிரமசிங்கேவும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

கடந்த ஜூன் மாதத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்த இரணில் விக்கிரமசிங்கே இத்திட்டம் குறித்தும் வலியுறுத்தினார். 

அதைத் தொடர்ந்து, தலைமன்னார்- தனுஷ்கோடி கடல்வழிப் பாலம் குறித்து இரு தரப்பு உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனைகளில் ஈடுபட்டுவருகின்றனர். வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவத்ரா, இலங்கை அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க இடையே கடந்த 27, 28 ஆகிய இரு நாள்களிலும் தில்லியில் ஆலோசனை நடைபெற்றது. 

அதில், இலங்கை அரசின் தரப்பில் இத்திட்டத்துக்கான குழுவை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டது. 

இந்தத் திட்டத்தின்படி, 23 கி.மீ. தொலைவுக்கு கடலுக்குள் இருப்புப்பாதையும் சாலையும் கொண்டதாக பாலம் அமைக்கப்படும். பாலம் அமைக்கப்பட்டால் இரு நாடுகளிடையிலான வர்த்தகம், சுற்றுலா போக்குவரத்து மிகவும் எளிமையாகும் என்றும் பாதுகாப்புச் செலவினங்களும் எளிதாவதுடன் குறைவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com