
பார்வையற்றவர்களுக்கான முதலாவது மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
பார்வையற்றவர்களுக்கான முதலாவது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டெல்லி மற்றும் கொழும்புவில் நடைபெற்றது. இந்த தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தின.
இதில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்ட இந்த தொடர், கடந்த நவம்பர் 11ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது.
லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், இறுதிப்போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் மட்டுமே அடித்தது.
பின்னர் 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெறும் 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் பார்வையற்றவர்களுக்கான முதலாவது மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை பூலா சரேன் 27 பந்துகளில் 44 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். அவரே ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.