மொட்டைதான் ஒழுக்கமா? அமைச்சர் ஜெகதீஸ்வரி வருத்தம் தெரிவிக்க வேண்டும்!

Minister Jagadeeshwari
அமைச்சர் ஜெகதீஸ்வரி
Published on: 

மாணவர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சுக்கு இந்திய மாணவர் சங்கத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அயன்ரெட்டியபட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சமூகநலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, பள்ளி மாணவர்கள் ஒழுங்காக முடி வெட்டவில்லை என்றால் அவர்களுக்கு மொட்டை அடித்துவிட வேண்டும் என்றும், அத்தகைய மாணவர்களை மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

"இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (RTE Act)-ன் பிரிவு 17(1) தெளிவுபடுத்துவது என்னவென்றால், "பள்ளிகளில் எந்த ஒரு குழந்தையும் உடல்ரீதியான தண்டனைக்கோ அல்லது மனரீதியான துன்புறுத்தலுக்கோ உள்ளாக்கப்படக் கூடாது" என்பதாகும். மாணவர்களுக்கு மொட்டை அடிப்பது போன்ற செயல்கள் முற்றிலும் சட்டவிரோதமானவை மட்டுமல்லாமல், மாணவர்களின் மனநிலையைப் கடுமையாகப் பாதிக்கும் செயலாகும்.

அமைச்சரின் இத்தகைய பேச்சு, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களை முடி வெட்டுவது என்ற பெயரில் ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தொடர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும். அரசின் உயர் பொறுப்பில் உள்ள அமைச்சரின் பேச்சு இத்தகைய அத்துமீறல்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்.

மாணவர்களின் தோற்றத்தை வைத்து அவர்களை ரவுடிகள் என்று ஒப்பிடுவதும், அவர்களைக் காவல்துறையினர் குற்றவாளிகளாகப் பார்ப்பார்கள் என்று கூறுவதும் மாணவர்களை அவமதிக்கும் செயலாகும்.

மாணவர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்குவது என்பது அவர்களை அவமானப்படுத்துவதோ, அச்சுறுத்துவதோ, அவர்களின் தன்மானத்தைப் புண்படுத்துவதோ அல்ல. மாணவர்களிடம் உரையாடி, அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு வழிநடத்துவதுதான் கல்வியின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் போதிய வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், ஆசிரியர் பற்றாக்குறை உட்பட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாமல் உள்ளன. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கும், ஏழை எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர், மாணவர்களின் தலைமுடியைப் பற்றி இத்தகைய கருத்துகளைப் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

மாணவர்கள் எப்படி உடை அணிய வேண்டும், எப்படி முடி வெட்ட வேண்டும் என்பதில் பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்கள் இருக்கலாம். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக மாணவர்களின் கண்ணியத்தையும் தன்மானத்தையும் பறிக்கும் வகையிலான நடவடிக்கைகளையோ, சட்டத்திற்குப் புறம்பான தண்டனைகளையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே, மாணவர்களை அவமதிக்கும் வகையிலும், ஆர்.டி.இ. சட்டம் 17(1)-க்கு எதிராகவும் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது கருத்தைத் திரும்பப் பெற்று, மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். மேலும், பள்ளிகளில் நடைபெறும் தொடர் மன/உடல் துன்புறுத்தல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர்களின் பொதுவெளிப் பேச்சுகள் மாணவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்பதைத் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்." என்று இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக் குழு கூறியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram