மதுரை நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டா மீனாட்சி மாட்டியது எப்படி?

கைதான இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி
கைதான இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி
Published on: 

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் சம்மந்தப்பட்ட இன்ஸ்டா பிரபலமான நிஷாந்த்தின் தந்தை சுரேஷ், அவருடைய தோழி மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் உள்ள மிகவும் பரபரப்பான புறவழிச்சாலையான காளவாசலில் உள்ள தனியார் நகைக்கடையான தனிஷிக்கில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கநகைகள், கடந்த 12ஆம் தேதி அதிகாலை காணாமல் போயின.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

முன்னதாக, நகைக்கடையில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தபோது, அதிகாலை 3.34 மணியளவில் ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர் நகையைத் திருடிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில், போலீசாரின் தொடர் விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் இன்ஸ்டா பிரபலமான நிஷாந்த், அவருடைய தோழி மீனாட்சி என்று கண்டுபிடிக்கப்பட்டது. நிஷாந்த் அணிந்திருந்த ஆடைகளை தன் தந்தையுடன் சேர்ந்து எரித்துள்ளார். இதைப் பார்த்த ஒருவர் கொடுத்த தகவலை அடுத்தே போலீஸ் பிடி இறுகியது. நிஷாந்தின் தந்தை சுரேஷிடம் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸ், மீனாட்சியையும் பிடித்து விசாரித்தனர்.

போலீசார் அவரிடம் தீவீர விசாரணை நடத்தியதில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை மாடக்குளம் மலையடிவாரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மீனாட்சியை அங்கு அழைத்து சென்ற போலீசார், புதருக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ நகைகள் அடங்கிய பையை மீட்டனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை 3 பகுதிகளாக பிரித்ததாகவும், அவற்றில் 2 பங்குகளை கொடுத்துவிட்டு நிஷாந்த் தலைமறைவானதாகவும் மீனாட்சி போலீசாரிடம் தெரிவித்தார்.

மீனாட்சி, நிஷாந்த்தின் தந்தை ஆகிய இருவரிடம் இருந்த 5 கிலோ நகைகளையும் போலீசார் மீட்டனர். இதுவரை, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 15 கிலோ நகைகள் வரை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனாட்சி, நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோருக்கு வரும் நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூரில் யாரோ ஒருவர் போனை வாங்கி மீனாட்சியிடம் கடைசியாக் நிஷாந்த் பேசி இருப்பதால் அப்பகுதியில் அவருக்கான தேடுதல் வேட்டை நடப்பதாகக் கூறப்படுகிறது.

தவெக ஆதரவாளர் போல் மீனாட்சி தன்னைக் காட்டிக் கொண்டிருப்பதால் இணையத்தில் மாற்றுக் கட்சியினர் பலமாக விமர்சித்து வருவது குறிப்பிடத் தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram