தனபால் - வடிவேலு
தனபால் - வடிவேலு

அருந்ததியருக்கு அதிமுகதான் பாதுகாவல்... ஒரிஜினல் ’மாமன்னன்’ தனபால் கருத்து!

Published on

பொதுவாக அரசியல் விவாதங்களில் தலைகாட்டாமல் இருப்பவர் முன்னாள் சபாநாயகர் தனபால். மாமன்னன் திரைப்படம் வெளியானபோது அவர் யார் என பலரும் தேடித்தேடி தெரிந்து கொண்டனர்.

தற்போது, அவர் உள் ஒதுக்கீடு தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“அருந்ததியர் சமுதாயத்தின் பாதுகாவலர் என்றுமே அதிமுக தான். அதிமுக என்றாலே அருந்ததியர் சமுதாய மக்களின் பாதுகாப்பு இயக்கம் என்ற நிலைதான் அன்றும் இருந்தது; இன்றும் தொடர்கிறது.

தமிழ்நாட்டில், தீண்டாமை ஒழிப்பு சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தியது, இந்தியாவில் முதல் முறையாக கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி இரட்டைக் குவளை முறையை ஒழித்தது எம்.ஜி.ஆர்.தான். அருந்ததியர் சமுதாய மக்களின் உள் இட ஒதுக்கீடு கோரிக்கை பலமாக எழுந்தபோது, ஆணையத்தை ஏற்படுத்தி, சரியான கணக்கெடுப்பு செய்யாமல், அருந்ததியர்களை குறைவாக கணக்குக்காட்டி, 6 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பதிலாக வெறும் 3 சதவீத உள் இடஒதுக்கீடு கொடுத்தனர்.

18 சதவீதத்தில் நியாயமாக 6 சதவீத இட ஒதுக்கீடு வரவேண்டிய நிலையில், பெயரளவிற்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை செய்துவிட்டு, தன் ஜால்ராக்களை விட்டு துதிபாடு செய்ததுதான் தி.மு.க-வின் பணியாகும்.

திமுக-வின் ஆதரவு வட்டத்தில் இருக்கின்ற சிலர், தங்களின் ஆதரவாளர்கள் மூலமாக அருந்ததியர் இட உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும், யாரும் அறியாதது கிடையாது.

அருந்ததியர் சமுதாய மக்களை குறைந்தபட்ச அளவில் இட ஒதுக்கீடு என்ற நாடகத்தை நடத்திய திமுக, ஜெயலலிதா இட ஒதுக்கிட்டை எதிர்த்ததாக ஒரு கபட நாடகத்தை நடத்துகிறது.

உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆபத்து வந்தபோது 2020-ஆம் ஆண்டு 20 பேர் கொண்ட வல்லுநர் கமிட்டி ஒன்றை அமைத்து சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து வாதாடி, தற்போது 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வுக்கு வழிவகுத்து இந்தத் தீர்ப்பு வருவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது அதிமுக அரசுதான். இதையெல்லாம் மறைத்து தி.மு.க. ஆடும் கபட நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

போலி சமூக நீதி பேசும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலின மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், கலவரங்கள் ஆகியவைகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.” என்று தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com